அன்று மாலை முழுவதும் கரிசக்காற்று கோயிலின் முற்றத்தில் அலைந்துகொண்டிருந்தது. உள்ளே ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. ஒரு மூலையில், மங்கலான வெளிச்சத்தில் அந்தப் பெண் நின்றுகொண்டிருந்தாள். சிலைதான்! ஆனால் ஏனோ, அவள் யாருக்காகவோ காத்திருப்பதுபோல இருந்தது. எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை… ஆனால்… கொஞ்ச நேரம்தான் பார்த்துக்கொண்டிருந்ததாக எனக்கு நினைவு.
"இது அகலிகை," என்றார் என்னை கடந்து சென்ற ஒரு வயதானவர்.
"விமோசனம் அடைந்த பிறகான சிலையா?" என்று கேட்டேன். அவர் சிரித்தார்.
ஏன் அப்படிக் கேட்டேன்? எனக்கே தெரியவில்லை. கொஞ்சம் சிரித்து மழுப்பியபடி… சுதாரித்துக்கொண்டேன்.
"ஆமாம் தம்பி."
விமோசனம் அடைந்த முகத்தில் ஏன் இவ்வளவு சோகம் இருக்கிறது என்று அவரிடம் கேட்கத் தோன்றியது; ஆனால் கேட்கவில்லை. அந்த இரவு அந்த முகம் என் தூக்கத்திற்குள்….
கல்லாக மாறிய பிறகு எத்தனை ஆண்டுகள் கடந்தன என்பது அகலிகைக்கே தெரியாது. மழை பெய்தது; வெயில் எரிந்தது. அருகில் மரங்கள் வளர்ந்து பட்டுப்போயின. அவள் மட்டும் அப்படியே!
ஒருநாள் தொலைவில் காலடிச் சத்தம் கேட்டது. "யார்?" என்று கேட்க நினைத்தாள். கல்லால் எப்படி கேட்க முடியும்? ஆனால் அவளது மௌனம் கேட்டிருக்க வேண்டும். இராமன் அவள் அருகே வந்தான். கால் தொட்டது. கல்லுக்குள் அடைபட்டிருந்த உயிர் மெதுவாக விழித்துக்கொண்டது.
கண்களைத் திறந்த அகலிகையைப் பார்த்து இராமன் மெதுவாகச் சொன்னான்:
"பெண்ணே... நீ விடுதலை பெற்றுவிட்டாய்." அகலிகையின் கண்கள் நிரம்பின. பல ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒருவன் அவளைக் குற்றவாளியாக அல்ல, மனிதியாகப் பார்த்திருந்தான். "நான் உண்மையிலேயே விடுதலை பெற்றுவிட்டேனா?" என்று அவள் மனதிற்குள் கேட்டுக்கொண்டாள். அன்று அவள் நம்பினாள், நீதி இன்னும் இந்த உலகத்தில் உயிரோடிருக்கிறது என்று.
ஆண்டுகள் உருண்டோடின. ஒரு மாலை. ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த அகலிகையிடம் ஒரு வயதான பெண் வந்து நின்றாள்.
"செய்தி கேட்டாயா?"
"என்ன செய்தி?"
"சீதாவைக் காட்டுக்கு அனுப்பிவிட்டார்களாம்."
அகலிகை சிரித்தாள். "யாரை?"
"சீதாவை."
"யார் அனுப்பினது?"
அந்தப் பெண் தயங்கினாள். "இராமன்."
அகலிகை சிரிப்பதை நிறுத்தினாள். "எந்த இராமன்?"
"அயோத்தி இராமன்."
"இல்லை... நீ ஏதோ தவறாகக் கேட்டிருப்பாய்."
"இல்லை. ஊரெல்லாம் அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது."
நீண்ட அமைதி. பிறகு அகலிகை மெதுவாகக் கேட்டாள்: "ஏன்?"
"ஒருவன் சந்தேகப்பட்டானாம்."
"அவள் அக்னியில் இறங்கி வந்தாளே?"
"அதெல்லாம் போதவில்லையாம்."
அகலிகை தூரத்தில் பார்த்துக்கொண்டிருந்தாள். மிக நீண்ட நேரம். பிறகு மெதுவாகச் சிரித்தாள். அது சிரிப்பா, வேதனையா என்று அந்த வயதான பெண்ணுக்குப் புரியவில்லை.
"அப்படியா..." அவ்வளவுதான் சொன்னாள்.
அந்த இரவு அகலிகை தனியாக அமர்ந்திருந்தாள்.
"என்னைச் சபித்தது கௌதமன் என்று நினைத்தேன்..." காற்றிடம் பேசினாள். "இல்லை. என்னைச் சபித்தது இந்த உலகம்."
சிறிது நேரம் கழித்து மீண்டும் சொன்னாள்: "சீதாவையும் காட்டுக்கு அனுப்பியது இராமன் இல்லை." காற்று மட்டும் பதிலில்லாமல் வீசியது. "அவளையும் அனுப்பியது இதே உலகம்தான்."
அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவளுக்குள் உடைந்தது. கௌதமனின் சாபம் உடைக்காததை அந்தச் செய்தி உடைத்தது. இராமன் மீட்ட நம்பிக்கையை இராமனே காப்பாற்ற முடியவில்லை. அன்று அகலிகை இரண்டாவது தடவையும் கல்லானாள். அவளது உடல் அல்ல, அவளது நம்பிக்கை!
அதிகாலை நான் திடீரென்று விழித்துக்கொண்டேன். அந்தக் கோயில் மீண்டும் நினைவுக்கு வந்தது; அந்தச் சிலையும் மீண்டும் நினைவுக்கு வந்தது. "விமோசனம் அடைந்த அகலிகை," என்று வயதானவர் சொன்னது இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
