Monday, June 14, 2021

அப்பாவின் சவப்பெட்டி

 


அப்பாவின் உடலை வீட்டின் முற்றத்திற்கு எடுத்து வந்தனர். ஒடுங்கி. இளைத்துபோய்...எலும்பு தோலுமாய் வற்றிப்போய் இருந்தது உடல். விடுக்கென்று முன்கோபம் கொள்ளும் அப்பாவின் முகம் எந்தவொரு சலனமும் இல்லாமல் இருந்தது. கார்டனிங் செய்வதில் அதீத ஆர்வம் கொண்ட அவரின் கைகள் ஒடுங்கி, ஒல்லியாய் செபமாலை ஒன்றை பற்றியபடி வயிற்றின் மீது விரல்கள் மடித்து கைகுவித்து வைக்கப்பட்டிருந்தன. கால்கள் ஓய்ந்துபோய் கட்டைவிரல்கள் இரண்டும் வேட்டி ஒன்றிலிருந்து கிழித்தெடுத்த துணியினால் இழுத்து கட்டப்பட்டு விரைத்துபோயிருந்தன.

உடலைச் சுற்றி சாங்கியங்கள் செய்து கொண்டிருந்தார்கள். தலைமாட்டில் அம்மாவை அமரச்செய்து ஒவ்வொருவராய் வந்து புதுப்புடவை சார்த்தினர். அம்மாவின் தாலியைக் கழற்றி ஒரு சொம்பிலிருந்த பாலில் போட்டனர். அம்மா, அழுது அழுது எந்த உணர்ச்சியுமின்றி உட்கார்ந்திருந்தார். பேரப்பிள்ளைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக சாங்கியங்கள் செய்தனர்.

ஊரிலிருந்து வந்து கடைசியாக நான் பார்த்துவிட்டு போனபோது, மூத்தமருமகளான என் மனைவி, அவரின் தலைமாட்டில் அமர்ந்தவாறு நெற்றியை வருடியபடியே 'அப்பா நான் மரியா, உங்க மகள் வந்திருக்கிறேன். தெரியுதா என்றபோது... 'முகம் இலேசா மலர்ந்து தலையாட்டினார். 'ஏதாவது சொல்லனுமா அப்பா', என்று பேச்சினூடே அவள் கேட்டபோது மட்டும், 

'ஆமா'

'சொல்லுங்க அப்பா.'

ஆனால், ஏதோ சொல்ல முயற்சித்தும் அவருக்கு நா எழவில்லை. கொஞ்ச நாட்களாக சாப்பிடுவதை அறவே நிறுத்திகொண்டிருந்திருந்தார். அமைதியான, ஆழமான பிடிவாதக்காரர். தனக்கு 'சரி', என்று நினைத்துவிட்டதை பிடித்துக்கொண்டுவிடுவார். எவர் சொன்னாலும் மாற்றிக்கொள்ளமாட்டார். இப்பொழுது சாப்பாட்டிலும் அதேபோல முரண்டுபிடித்தார். பல்லை இறுக்க கடித்துக்கொண்டு சாப்பிட மறுத்தார். எதனால் அப்படி மறுத்து முரண்டுபிடித்தார் என இதுவரை எவருக்கும் தெரியவில்லை.

வீட்டின் முற்றத்தில் கிடத்தியிருந்த உடலில் அந்த இறுக்கமான பிடிவாதம் தளர்ந்து போயிருந்தது. அந்த இறுக்கமான பிடிவாதம் என்ன ஆனது? சுற்றியிருந்தவர்கள் அவரைப் பற்றி அவரவருக்கு தெரிந்ததை தங்களிடையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவரது உடலை கிடத்தியிருந்த போர்டிக்கோவில், சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவருடைய ஸ்கூட்டி வண்டி தன் கழுத்தை அவர் பக்கமாக திருப்பி அவரைப் பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. வண்டியில் பேரப்பிள்ளைகள் சிலர் ஏறி இறங்கிய வண்ணம் அப்பாவின் உடலை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த வண்டியை ஏறக்குறைய 15 வருடங்களுக்கு மேலாக ஓட்டிக்கொண்டிருந்தார். அந்த வண்டி ரிப்பேர் ஆனாலும் அதற்கு வைத்தியம் பார்ப்பதுபோல் இவர்தான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பார். 'மெக்கானிக் யாரையாவது வரச்சொல்லி பார்;க்கலாம்லப்பா', என்று சொன்னால் கேட்கமாட்டார். 

ஊருக்கு வரும்போதெல்லம் அந்த வண்டியை, நானும் என் தம்பியும் கொஞ்சம்  சிரமப்பட்டு தான் ஓட்டுவோம். வண்டியை மாற்றிவிடலாம் என்றாலும், 'வேண்டாம்' என்று உறுதியாக மறுத்துவிடுவார். 'நான் வெளியே போறதே இல்ல... அப்புறம் எதுக்கு புதுவண்டி', என்று சொல்லிவிடுவார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் சரி, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தபிறகான அவருடைய கடைசி நாட்களிலும் சரி, அவரின் மேனரிசம், பேசும்விதம் எல்லாம் எனக்கும் இருப்பதை மிக வெளிப்படையாக என் உடலில் பார்த்தேன். அப்பாவுடையது தான் மகனுக்கும் என்றாலும்;.. அந்த மேனரிசங்கள், கோபங்கள், சிரிப்பு... பதற்றமான தன்மை, பயத்தை மறைப்பதற்கான முயற்சிகள், 'எனக்கு எல்லாம் தெரியும்', 'நான் சொல்வதை கேள்', என்பன போன்ற ஒவ்வொன்றும் என்னிடம் அப்படியே அச்சுபிசகாமல் இருப்பதை வெளிப்படையாக உணரவும், பார்க்கவும் முடிந்தது. ஆனால், 'நான் அவ்வாறு இல்லை', என்று இதுவரையிலும் நம்பிக்கொண்டிருந்தேன். என் மனைவியிடம், 'நான் அவ்வாறு நடந்துகொள்கிறேனா?', என்று கேட்டும் பார்த்துக்கொண்டேன். அவளோ.. 'சும்மா எதையாவது யோசிச்சிட்டு இருக்காதீங்க', என்று சொல்லிவிடுவாள். 'சொல்ல முடியாமல் தட்டிக் கழிக்கிறாளோ?', என்றும் கூட நினைத்துக்கொண்டேன். சில சமயங்களில், 'அப்புறம் நீங்க உங்க அப்பா மாதிரிதானே இருப்பீங்க. வேற யாரை மாதிரி இருப்பீங்க?', என் கேட்டுவிட்டு, கடந்துவிடுவாள். அந்த வாக்கியத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லாதது போல் எனக்கு தோன்றும். கொஞ்ச நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் அவளை பார்த்தவாறு அமர்ந்திருப்பேன். 'போய் வேலைய பாருங்க', என்று எழுந்து சென்றுவிடுவாள்.

உடலும் அதன் வழியான உடல்மொழியும், நடத்தைகளுமே நாம் ஒவ்வொருவரும் யார்? எந்த வகையில் மனிதர்களாக இந்த சமூகத்தில் பிற மனிதர்கள் மத்தியில் வாழ்கிறோம்? என்பதை வெளிப்படுத்துகிறது. ஒருவர் எப்படிபட்டவர் என்பதை, அவரது நடத்தைகள் கொண்டுதான் சுற்றியிருப்பவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. எவ்வளவு தான் ஒருவர் தன் உண்மை முகத்தை மறைக்க முடிந்தாலும், அது எங்கோ எப்போதோ ஒரு தருணத்தில் அவரை அறியாமலேயே அவரது உடல்மொழி அல்லது நடத்தைகள் வழியாக அவரை வெளிப்படுத்திவிடும்.

அப்பா, எப்போதும் அழகாகவும், நேர்த்தியாகவும் இருப்பதையே விரும்பினார். தன் உடைகளை இஸ்திரி செய்துதான் அணிந்தார். எப்போதும் இன்சர்ட் செய்து பெல்ட் அணிந்துதான் வெளியே கிளம்புவார். எப்போதும் மற்றவர்கள் முன் எவ்வளவு கௌரவமாகவும், பெருமிதமாகவும் வாழ்கிறோம் என்பதில் ஆர்வம் கொண்டிருப்பார். நான் ஒரு தனியார் பள்ளியின் முதல்வராக இருப்பதில் அவருக்கு பெருமை உண்டு. நான் தெருவில் இறங்கி சின்னபசங்களோடு கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டு ஒவ்வொருமுறையும், 'நீ ஒரு பள்ளிமுதல்வர் என்பதை மறந்துவிடாதே', என்று அறிவுறுத்துவார். 

நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் ஏதோ ஒரு விஷேசம். என்ன விஷேசம் என்று நினைவில் இல்லை. ஆனால் அது ஒரு மதியவேளை. மதிய உணவிற்கு பிறகு மாமாக்கள், அத்தைகள் மற்றும் அப்பா என அனைவரும் பெட்சீடை விரித்து சீட்டு விளையாடுவது என்பது எங்கள் குடும்பங்கள் ஒன்றுசேரும்போது நடக்கும் வழக்கமான நிகழ்வு.

குழந்தைகள் நாங்கள் ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென அப்பாவின் குரல் சத்தமாக ஒலித்தது. ஏதோ வாக்குவாதம். என் பையன் பத்தாவது பப்ளிக் எக்ஸாம்ல 450 மேல வாங்குவான். அப்படி வாங்குலேனா என் பெயரை மாத்திக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

நான் நல்லா படிக்கிற மாணவன் தான். அதற்காக அப்படியொரு சவாலை விடுவார்களா? அன்றோடு தொலைந்தது எனது தூக்கம். ஒருவேளை நான் 450 மார்க் வாங்காம போயிட்டா? அப்பா இதற்கு முன்பு வரை நான் என்ன படிக்கிறேன்? எப்படி படிக்கிறேன்? என்று கேட்டதே இல்லை. ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கும்போது மட்டும் அதென்ன 95 தான் வாங்கியிருக்க... 5 மார்க் என்ன ஆச்சு என்று பார்? என்பதாடு சரி. மற்றபடி என படிப்பைப் பற்றி கேட்டதே இல்லை? அதனாலேயே பயம் கூடியது எனக்கு. இவ்வளவு நம்பிகை கொண்ட அப்பா தோற்றுவிடக் கூடாதே என்கிற தவிப்பே பயமாகவும் பதற்றமாகவும் மாறியிருந்தது. அந்த பதற்றத்திலேயே படித்தேன் 420 தான் மார்க் வாங்கினேன், இருந்தும் அப்பா பெருமைபட்டுக் கொண்டார்.

அப்பாவுக்கு கொஞ்சம் பெருமைபீற்றிக்கொள்ளும் பழக்கம் உண்டு. அம்மாவிடம் இருந்து தொற்றிக்கொண்ட பழக்கமாக இருக்கலாம். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலிருந்தபோது கூட அங்கிருந்த டாக்டர், நர்ஸ்களிடம், மற்ற  வருவோர் போவோரிடமெல்லாம் என் பையன் இவன் பள்ளி முதல்வராக இருக்கிறான். பெரிய அறிவாளி என பெருமைபீற்றிக்கொள்வார். அப்பா, எதற்கு இதெல்லாம்? ஸ்கூல் பிரின்ஸிபலாக இருப்பதெல்லாம் ஒரு விசயமா? ஆமா! ஆமா! உன் அறிவுக்கு ஸ்கூல் பிரின்ஸ்பல் எல்லாம் குறைவு தான் என என் வாயை அடைப்பார். 

"நீங்க இப்படியே பேசுங்க.. அவங்க நான் என்னமோ பெரிய ஆளுனு நினைச்சிக்கிட்டு ஹாஸ்பிடல் பில்ல நல்ல ஏத்தபோறாங்க?", என்ற சொல்லிபடி அவரை பார்த்தால், அவர் சிரித்துகொண்டிருப்பார். அந்த சிரிப்பில் ஒரு இயலாமையும், விரக்தியும் இருக்கும். 'பெருமையும், நாலுபேர் நம்மல பற்றி பெருமையா பேசாத வாழ்க்கை என்ன வாழ்க்கை, என்பதான சிரிப்பு அது. 

எனக்கோ நம்மைப் பற்றி எதுவும் சுற்றியிருக்கிறவர்களுக்கு  தெரியாமல் இருப்பது நல்லது. அப்பொழுது தான் நாம் நிம்மதியாக நம் வாழ்க்கையை வாழமுடியும் என்கிற புரிதல்தான் அதிகம். மற்றவரின் அபிப்பிராயங்களுக்கு நான் என் வாழ்க்கையை வாழ முடியாது. ஆனால் அப்பாவோ, சமூகத்தில் வாழும்போது பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம், என்பார். காட்டில் தனியாக துறவி மாதிரி வாழ்;பவன் வேணுனா.. அப்படி இருக்கலாம் ஊருக்குள்ள வாழும்போது பிறரோடு இயைந்து இணைந்து வாழ அவர்களின் நம்மைப் பற்றிய எண்ணம் அவசியமாகிறது என்பார்.

அந்தவகையில் தன் இறப்புக்கு கூட நல்ல கிரோகரியன் பூசை வைக்கவேண்டும். பல பாதிரிமார்கள் சூழ தன் நல்லடக்கம் நடைபெறவேண்டும். என்று சொல்லிக்கொண்டிருப்பார்.  வந்திருந்த உறவினர்களில் ஒருவர் சொன்னார். கொரானாக் கட்டுபாடுகள் சூழலில் எந்த சர்ச்சிற்கு கூட எடுத்துட்டு போக முடியாது ... சவஊர்தியை நேராக கல்லறைக்கு தான் விடவேண்டும். 

அப்பா தனக்கான சவப்பெட்டியைப் பற்றி ஏதேனும் சொன்னாரா? என்று மனதில் ஓட, வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த சவப்பெட்டியையே
 பார்த்துக்கொண்டிருந்தேன்.