காலம்: கி.பி 1895களின் பிற்பகுதி
இடம்: வேட்டுவப்பட்டி, பருமலைக்காடு, விருதுபட்டி ஜில்லா
அது ஒரு மழைக்கான காலம். தூக்கத்திலிருந்து அலறி எழுந்து உட்கார்ந்த பிச்சைகனி, படுக்கையில் இருக்க மனம் ஒப்பாதவராய் கையை ஊன்றி எழுந்து மெதுவாய் குடிசையின் முன்பகுதிக்கு வந்தவாறே தோளிலிருந்த துண்டால் முகத்தை துடைத்துகொண்டார். தோளின் அங்கமாக மாறிபோன நைந்த துண்டின் சிக்குவாடை, தூக்கத்தை கொஞ்சம் துடைத்தது. வாசலுக்கு முன்பாக வந்து நின்றவர், உடலை கொஞ்சம் வளைத்தபடி உள்ளங்கையை கண்களுக்கு மேல் அரைவட்டத்தில் குவித்து கரிசக்காட்டை பார்த்தார். இருள் இன்னும் முற்றிலுமாக விலகியிருக்கவில்லை. இந்தமுறை கண்களை கொஞ்சம் நிதானிக்கச்செய்து மீண்டுமாக உற்று பார்த்தார். தூக்கத்திலிருந்து நிதானமின்றி எழுந்திருந்ததால் கண்களில் இன்னமும் இருள்கட்டி கிடந்தது.
வீட்டின் பின்பகுதியிலிருந்த பருத்திப்படப்புக்கு அருகே முந்தானையை விரித்து படுத்துகிடந்த முத்தம்மாள் தலையை அள்ளிச் செறுகியபடி,
'இப்படி விடியக் கருக்கல எழுந்து அங்கென்னத்த பார்த்திட்டிருக்கீங்க?';.
பிச்சைக்கனி கொஞ்சமும் அவளைக் காதில் வாங்கியதாய் தெரியவில்லை. கட்டி கட்டியாய் திரண்டிருந்த கரிசமண்னைப் பார்த்தபடி, 'உழவுபோட்டு நாலு நாளாவது இன்னும் மழைகூடி வராம கிடக்கு...' என்று சலிப்புடன் முணுமுணுத்துக்கொண்டே குடிசைக்கு வெளியே முற்றத்திலிருந்த வேப்பமரத்தடிக்கு வந்து குத்தவைத்து திடமாய் உட்கார்ந்தார்.
கரிசக்காட்டை பார்த்தபடியே, 'ஏலேய்;, மந்தையா,' என மகனை அழைத்தார்.
'காட்டு பக்கம் போயிருக்கான், வந்துருவான்.' என இடைமறித்தாள் முத்தம்மாள்.
கருப்பு மண்கட்டிகள் மல்லாந்து வானத்தை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. காலங்காலமாக வானம் பார்த்த விவசாயம் தான் கரிசக்கார குடியானவர்களின் பூர்வஜென்ம புண்ணியமாய் போனது. கைக்குத்தல் அரிசியும், அவலும், சோளமும், கம்பும், கேழ்வரகும், குதிரைவாலியும் தான் கரிசல் மக்களின் வாழ்வாரத்திற்கு அட்சதை போட்டுகொண்டிருக்கின்றன. கரிசக்காட்டை பொதுவாகவே பருத்திக்காடு என்று சொல்லுமளவிற்கு பருத்தி விளைச்சலும் பிராதன தொழிலாக இருந்தது.
சாமிய வேண்டியபடி ஆட்டுபட்டி பக்கம் வேலையை கவனிக்க கிளம்பினார் பிச்சைக்கனி. வேட்டுவப்பட்டியில் நடந்தேறிய கோர சம்பவத்திற்கு பிறகு தரையில் விழுந்து சிதறிய மண்பானை சில்லுகளென நொறுங்கிய பிச்சைக்கனியும் இன்னும் சில குடும்பங்களும் பருமலைக்காட்டிற்கு குடும்பத்தோடு ஒருசேர வந்து குடியேறிவிட்டிருந்தனர்.
வேட்டுவப்பட்டியில் அன்றையத் தினம் நிகழ்ந்த கொடுமைகள் அவ்வப்போது மண்டைக்குள் ஒரு கொடும் நினைவின் நிழற்படமாய் சிதறி தறிகெட்டு ஓடியபடியே இருந்தன. நினைவினுள் பரந்து விரிந்த காடொன்றில் வகைதொகைதெரியாமல் வளர்ந்த மிருகம் ஒன்று திசையறியாது கிடைத்ததையெல்லாம் வேட்டையாடித் திரிந்தது. சிலசமயம், மிருகம் வெவ்வேறு உருவம் கொண்டு வேட்டையை நடத்தும். திடீரென தனித்தோ, கூட்டம் சேர்த்தோ அதன் கோரவேட்டை விரியும். அதன் நீண்டநெடிய ஊளைச் சத்தம் மண்டைக்குள் கேட்டபடியே இருக்கும். நினைவுத் தெளிந்து திரும்பியபோதெல்லாம், 'மனசன் செத்து நாளாச்சு', என்று தனக்கு தானே புலம்பிக் கொள்வார் பிச்சைக்கனி.
இன்றும் அக்கொடும் நிகழ்வு அவரின் மண்டைக்குள் ஒரு நிழற்படமாய் ஓட ஆரம்பித்தது. ஈட்டிகள், தடிகள், கோடரிகள் என வேட்டுப்பட்டிக்குள் புகுந்த அரக்க கும்பல் கண்மூடித்தனமாக அங்கிருந்த சனங்களைத் தாக்கியது. கண்ணுக்கு தெரிந்தவரையிலான குடிசைகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. குடியிருப்புகளிலிருந்து நெருப்பிற்கு தப்பி வெளியே ஓடிவந்தவர்களையும் மறுபடியும் நெருப்பில் தள்ளியது வெறிப்பிடித்திருந்த கும்பல். அதைச் செய்தவர்கள் அனைவருமே மனிதர்கள் என்பதை பிச்சைக்கனியால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்பதைவிட அந்நிகழ்வு மனிதர்கள் மீதான பெரியக் குழப்பதையும் கேள்வியையும் ஏற்படுத்திவிட்டது. அந்த கலவரத்தில் ஏறக்குறைய இருபத்திரண்டு பேர் கொல்லப்பட்டனர். கலவரத்திற்கு மறுநாள் வந்த மெட்ராஸ் மெயில் நாளிதழ் ஒரு பச்சிளம் குழந்தை கொடுரமான முறையில் தாக்கப்பட்டு தலைநசுங்கி இறந்திருந்ததை செய்தியாக போட்டிருந்ததாக படிக்க தெரிந்த சிலர் பேசிக்கொண்டிருந்தபோது தான், ஊரைக் காலிசெய்துவிட்டு கிளம்புவது எனப் பிச்கைக்கனி முடிவெடுத்தார். பின்னாளில் பிரிட்டிஷ் போலிசாரின் தலையீட்டால் ஊர் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கலவரம் ஏற்படுத்திய ரணம் அவரை மீண்டும் ஊருக்கு திரும்பவிடாமல் செய்துவிட்டிருந்தது.
பருமலைக்காட்டிற்கு குடியேறி ஏறக்குறைய ஆறேழு வருடங்கள் ஆயிற்று. மந்தையனை முதுகில் அள்ளிப்போட்டு சாரத்தைக்கொண்டு அவனை இறுக்கி கட்டியபடி 'வெங்கு வெங்கு', என்று நடந்தே பருமலைக்காடு வந்துசேர்ந்தது இன்னும் பச்சையாய் மனதில் அப்பிக்கிடந்தது.
இதோ, மந்தையன் செம்மறியாட்டு கிடாக்கனக்காக வளர்ந்துகிட்டுவரான். ஆடு மேய்க்க கரிசகாட்டுக்குள் கூடவே சுற்றித்திரிகிறான். அரைக்கோவணத்தை அறுநாக்கொடியில் செருகிவிட்டு கரிசபுழுதியில் பயலுவலோடு முரட்டுத்தனமாய் விளையாடிக்கொண்டிருக்கிறவனுக்கு இன்னமும் தெரியாது தான் பிறந்த ஊர் வேட்டுவப்பட்டி என்று. தம் சாதிசனம் வேட்டுவப்பட்டியில், கொடியத் தூக்கினா கொடிக்கு ஆயிரம், கிளையத் தூக்கினா கிளைக்கு ஆயிரமென, அருக வேராட்டம் பரந்துபட்டு கிடக்குது என்று மந்தையனிடம் சொல்லவே பயந்தார் பிச்சைக்கனி. 'வேட்டுவப்பட்டிக்கு போகலாம்' என அவன் சொல்லிவிட்டால் என்னச்செய்ய? மறுபடியும் அந்த ஊருக்கு செல்வது என்பதை முற்றிலுமாகவே மறந்துவிட்டிருந்தார் பிச்சைக்கனி. காலம் அவரை, 'ஊரையிழந்த மனுசனும் அவன் புள்ளையும்' என்னும் கதையாய் சுருக்கிவிட்டிருந்தது.
எங்க இந்த மந்தையனை இன்னும் காணோம்?
'நான் காட்டுக்கு ஆடுகள பத்திகிட்டு கிழக்காம போறேன். மந்தையன் வந்தா சாப்பாட்ட கொடுத்து அனுப்பு', என்றபடி கிளிம்பினார் பிச்சைக்கனி.
'ஆங். ஆகட்டும்', என்ற முத்தம்மாள் அவர் போகிறதை வீட்டின் பக்கவாட்டில் வந்து நின்று பார்த்தபடி, மௌனமாய் அழுதுகொண்டிருந்தாள். கரிசகாட்டில் மைனாக்கள் மஞ்சள் மூக்குகளை ஆட்டி அவளுக்காய் கத்தி தீர்த்தன. மூளிவானம் இன்னும் மனம் திறக்காமல் வெயிலை கொஞ்சம் கொஞ்சமாக கரிசக்காட்டில் பரப்பி வைக்க ஆரம்பித்திருந்தது.
முத்தம்மா, பிச்கைக்கனிக்கு வாக்கப்பட்டு, வந்த நாள் முதல் அவனுக்கு பெரிய பலமாகத்தான் இருக்கிறாள். அவனின் எண்ணங்களை அவனுக்குள் உதிக்கும் முன்பே, அறிந்தவள் முத்தம்மாள். கிழக்கே சூரியன் மேலெழும்புவதற்கு முன்பாகவே விடிந்துவிடும் விடியலென அவன் நினைப்புக்களை கணித்துவிடுகிற விசயம் வேட்டுபட்டி கலவரத்திற்கு பின்பாக இன்னும் அதிகமாகிப்போனது. பருமலைக்காட்டிற்கு குடிவந்தபிறகு அவனை அவள் இன்னும் நெருக்கமாக கவனிக்கத் தொடங்கியிருந்தாள். வாட்ட சாட்டமான மனுஷன் எப்படியோ என்று ஆகிப்போயிருந்தான்.
வேட்டுவப்பட்டியில் இருக்கிற வரைக்கும் எதையும் கூறோடு கையாளுகிற ஆளு. ஊருக்குள்ள கடிதாசி எழுதனுமா இவரை தான் தேடுவாக. ஒரு பிரச்சனைக்கு தீர்வுனா பிச்சைக்கனிதானு ஊருக்குள்ள மரியாதைக்கு குறைவில்லை.
அந்த இரவு கலவரத்தில மொத்தமாக தன்னையே தொலைச்சிட்டு நிற்கிறாரு. கையில் கிடந்த பிஞ்சு குழந்தை மந்தையனை கலவரத்துல பலிகொடுத்த வேதனை அடிவயித்துல ரணமா தங்கி போச்சு. கையில இருந்து கதற கதற பிடுங்கிட்டு போனாங்க.
எங்குலச்சாமி.. மந்தையானு நானும் அவரும் கதறினோம்.
அடுத்தநாள் ஊருக்கு வெளிய.. பிள்ளை தலைநசுங்கி கிடந்தது. ஆனாலும் பிள்ளைய முதுகுல தூக்கிபோட்டு சாரத்தால இறுக்கி கட்டிகிட்டு "இந்த ஊர்ல இருக்கவேண்டாம் வா முத்தம்மானு" பருமலைகாடுக்கு வந்தோம்.
வந்த நாள் முதல் மந்தையனை அலைச்சிகிட்டு காடுகரையெல்லாம் ஆடுமேய்க்க போறதா நினைச்சிகிட்டே மனுஷன் அலையுறாரு. 'பிள்ளையை கொன்னுடாங்கனு.. சொல்லமுடியாம....' 'இந்த கொடுமையை அவருக்கு எப்படி புரிய வைப்பேன்.' கண்களில் தாரைத்தாரையாக கண்ணீர் வழிய அவன் மறையும் வரை நின்றிருந்தாள். மஞ்சள் மூக்கு மைனாக்காள் "வீச் வீச்" என்று அலறியவாறே இருந்தன.
மெல்ல சூரியன் அந்தநாளை முடித்துக்கொண்டு பிச்சைக்கனியோடு வீடு திரும்பியது. மந்தையன் மதிய சாப்பாட கொடுத்துட்டு சாப்பிடாமலேயே வந்துட்டான். 'எங்க அவன்?' 'சாப்பிட்டானா?' இளவட்டபய... இப்படி சாப்பிடாம திரிஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆவுறது?' என்று அவராகவே பேசிக்கொண்டு குளிக்க போனார். முத்தம்மா, மேஞ்சு திரிஞ்சு கூடு அடைய வந்த கோழிகளை அடைச்சபடி இருந்தாள்.
தீடீரென..
'அய்யோ புள்ள போச்சே', என்ற அலறல்.
என்னாச்சு.. எய்யா.. சாமி? என்று பதறியபடி ஓடிவந்தாள் முத்தம்மா.
கீழே கிடந்த பிச்சைக்கனியை அக்கம்பக்கத்து கூப்பிட்டு தூக்கிவந்த சுவற்றோரத்திலிருந்த கயித்துகட்டிலில் கிடத்தினாள். 'மந்தையன் வருவான்... வருவான்', என்று முணுமுணுத்தபடி கிடந்தார். அவ்வப்போது அதிர்ந்து, 'மந்தையா' என்று கத்தி அழைத்தபடியே இருந்தார். 'மந்தையா' என்னும் அவருடைய அழைக்குரல் கரிசக்காட்டில் போகுற தூரம் வரைக்கும் போய் பல வருடங்களுக்குத் திரும்பாமலே போனது.
மீண்டும் அவரின் நினைவு முழுவதும் கலவரம். மீண்டும் பெரும் மிருகமொன்று ஈட்டிகள், தடிகள், கோடரிகள் கொண்டு வேட்டையாடியது. காடு முழுவதும் அலைந்து திரிந்த மிருகத்திடமிருந்து தப்பித்து ஓடியபடியே இருக்கவேண்டியதாயிற்று.
'மந்தையா, மந்தையா' எனும் முனகல் மெல்ல ஓயத்தொடங்கியது. தூரத்தில் காற்றுவாக்கில் அலைந்த ஒரு கும்மிப்பாடலை முணுமுணுத்தபடி ஆசுவாச பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டார். கண்களின் ஓரத்தில் நீர்த்திவலைகள் துளிர்த்து நின்றன. அந்நீர்த் திவலைகளை நினைவுகளில் விரியும் காட்டில் அலைந்துதிரிகிற அப்பெரிய மிருகம் வந்து அருந்திபோனது. பிச்சைக்கனியும் மந்தையனும் நினைவில் காடுள்ள மிருகம் நிகழ்த்தும் கலவரங்கள் பலவற்றின எச்சங்கள் தானே.
காற்றில் அலைந்த கும்மிப்பாடலை அதோ அங்கே, அப்பெரிய மிருகம் முணுமுணுத்து போகிறது. பிச்சைக்கனியும், மந்தையனும், முத்தம்மாளும் மிருகத்தோடு சேர்ந்து பாடலை முணுமுணுத்தபடி போகிறார்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை காடு விரிகிறது.
"...நாலுபேரு அண்ணன் தம்பி
வேட்டுவப்பட்டி வெள்ளை ஐயா
பொட்டி ஓடைக்கு முன்னே
வீரம்மாள் பெற்ற
வீரமுள்ள வெள்ளை ஐயா
சாலச் சந்நிதியைத்
தானடைக்கச் சொன்னாரையா
மெல்லவே பத்திரகாளிக்கு
மேலான உற்சவம்
தாங்களும் செய்யவென்று
சந்தியிலே அவர் முந்திக் கொண்டு
பாங்காகச் சாமியைப் போக விடாமல்
பலத்த கலகங்கள்
செய்கின்ற காலத்தில்
வந்த அவருமாரை
கொள்ளைச் செய்தாரென்று
வல்ல இவருமார்கள்
பிராது செய்தார்..
.... ...
கலகங்கள் தீர
குலங்கள் செழிக்க
அழகாய்த் திருவிழாத் தான் நடத்த
நியாய வழக்கைத் தான் உரைத்தாரே."
முற்றும்.
