இடம்: சிராப்பள்ளிக் கோட்டை
காலம்: 1736 -1739 (மதுரை நாயக்கர்கள் ஆட்சியின் இறுதி காலகட்டம்)
ஆண்கள் வஞ்சகர்கள். பேச்சில் ஒன்றும் செயலில் ஒன்றும் என வாழும் வேடதாரிகள். ஆண்களால் எவ்வளவு எளிதாகப் பெண்களை ஏமாற்றிவிடமுடிகிறது! இதோ ! இன்று விஷக்குப்பியும் கையுமாக என்னைக் கொண்டுவந்து இங்கே நிறுத்தியிருக்கிறார்கள். சிக்சாகிப்பிடம் நான் மென்மையாய் நடந்துகொள்கிறேன் எனப் பலரும் என் காதுபடப் பேசினர். ஒரு அரசியாக இல்லாமல் ஒரு பெண்ணாக அவர்கள் பேசுவதைப் பற்றி யோசித்துப்பார்க்கிறேன்.
அவர்கள் சொல்வது போலக்கூட இருக்கலாம். அப்படியே இருந்தால்தான் என்ன? ஒரு அரசியாக நான் இருப்பதால் என்னிடம் இருக்கும் பெண்மை செத்துவிடுமா என்ன? இல்லையில்லை அப்படியிருக்க வாய்ப்பில்லை. நான் இராணி மீனாட்சி. இராணி சிவகாமியின் மருமகள் என்கிற கவசம் என்னைச் சுற்றி இறுக்கியிருக்கிறது.. 'மதுராவிஐயம்' செய்த தேவியின் வழிவந்தவள் நான். சுல்தான்களின் ஆட்சியில் பரிதவித்த மதுரையை விடுவிக்க வந்த விடுதலை வம்சத்தவள் நான்.
சிக்சாகிப்பை நான் எப்படிச் சந்திக்க நேர்ந்தது என நினைத்துப் பார்க்கிறேன். நாயக்க வம்சம் தழைக்க ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக என் பெரிய மாமனாரின் உறவினான பங்காரு நாயக்கனின் மகனைத் தத்தெடுத்ததிலிருந்து துவங்கியது என் பகை. தன் மகனுக்கு எதிராகத் தகப்பனான பங்காரு நாயக்கனே ஆற்காட்டு நவாபுகளிடம் பேரம் பேசியிருப்பதைத் தலைமை ஒற்றன் சொல்லியபோது நிஜமாகவே குழம்பித்தான் போனேன். "மகனுக்கு எதிராகத் தகப்பன்", இந்த ஆண்களே புதிர்களின் கலவைதான் இல்லையா?
இந்த புதிர்களால், வேறுவழியின்றி சிக்சாகிப்பை சந்திக்கச் சம்மதித்தேன். ஆம், அவன் முதலில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபொழுது, "என் இராஜ்ஜியத்தின் உள்விவகாரங்களில் இவன் யார் மத்தியஸ்தம் செய்ய?" என்று மறுத்து செய்தி அனுப்பியிருந்தேன். இன்று பங்காரு நாயக்கனின் துரோகத்தால் வேறு வழியின்றி போயிற்று.
எவரையும் மறுமுறை திரும்பிப் பார்க்கவைக்கும் அளவிற்கு அழகனாக இருந்தான் சிக்சாகிப். திருத்தமான மஸ்லீன் ஆடை அணிந்தவனாய், தன் எண்ணங்களின் அர்த்தங்களைத் தெரிந்தும்கூட உதிர்த்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையுடனான ஒரு மெல்லிய புன்னகையை எப்போதும் உதட்டில் கொண்டிருந்தான் அவன். ஆனால், நிச்சயமாக அவன் பெரும் வீரன் இல்லை என்பதை மட்டும் முதல் சந்திப்பிலேயே என்னால் யூகிக்க முடிந்தது. இருந்தும் காலங்கள் கடத்தினேன். சிக்சாகிப்பின்றி இதை முடித்துவிடவேண்டும் என நினைத்து வியூகங்கள் அமைத்தேன். நான் எடுத்துக்கொண்ட இந்த தாமதப்படுத்துதலே எனக்கெதிரான வதந்திகளை, பரப்புரைகளை, என்னுடைய தளவாய் கஸ்தூரிரங்கையன் மற்றும் பிரதானி வேங்கடகிருஷ்ணயன் இருவரும் செயல்படுத்துவதற்கு வசதியாய் போயின. எவ்வளவுக்கு எவ்வளவு நான் காலம் கடத்தினேனோ அவ்வளவுக்கு அவ்வளவு இன்று என் கையிலிருக்கும் விஷக்குப்பியின் வசம் நான் விழுந்திருக்கலானேன்.
என் கையில் இருக்கும் விஷக்குப்பியை, இந்த உலகத்திடமிருந்து மறைத்துக்கொள்கிறேன். என் தோழியும் என் மெய்க்காப்பாளர்களில் ஒருத்தியுமான துர்காகூட என் முடிவைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
ஒருநாள் உய்யங்கொண்டான் நதியில் நானும் அவளும் மகிழ்ந்து விளையாடியபடி கிடந்தபொழுது அவள் கேட்டாள், 'உன் கணவன் பாட்டி சிவகாமியின் கவனிப்பில் தான் இருக்கிறாராம். அரசின் முக்கிய முடிவுகளெல்லாம் உன் பாட்டி தான் எடுக்கிறாராம். இராணி அவர்கள் தர்பாரில் அமர்ந்திருக்கும் அழகும், கம்பீரமும் காணக் கண்கள் போதாது தெரியுமா?' அதற்கு நான், விளையாட்டாக அவர்களைப்பற்றி இவ்வாறு சொன்னேன், "ஆண்களின் உலகில் தனித்து நிற்கும் ஒற்றை புலியென நிற்கிறார்கள். வேட்டைக்காரர்கள் தக்க தருணங்களுக்காகக் காத்திருக்கலாம். ஏனெனில் அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஆண்கள் அல்லவா?'
பெண்மை, தாய்மை என்பவற்றையெல்லாம் நான் உதறித்தள்ளி வெகுநாட்களாயிற்று. இவற்றைச் சொல்லித்தானே பிறந்த அந்த நொடி முதல் எனக்குள்ளேயே நான் சிறையாக்கப்பட்டேன். இந்த சிறைக்கு முன்னால், என்னை சிக்சாகிப் வைத்திருக்கும் வீட்டுச்சிறையொன்றும், அவ்வளவு கொடுமையான அவமானமாக எனக்குப் படவில்லை.
சிக்சாகிப், போர்களும், சூழ்ச்சிகளும், அரியாசனங்களும், அதிகாரங்களும் மட்டுமே தன் வாழ்க்கை என ஆகிவிட்ட ஒருவன். இவற்றைத்தாண்டிய உலகை அவன் பார்த்ததற்கான எந்த அறிகுறியும் அவனிடம் நான் கண்டதில்லை. ஆனால் பழகுவதற்குப் புறாவின் அமைதியையும், நரியின் துறுத்துறுத்தனத்தையும் ஒருங்கே கொண்டவனாய் தெரிந்தான். நான் அவனைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும், அவனிடம் எச்சரிக்கையாய் இருக்கும்படி என் அண்ணன், எனக்கு அறிவுறுத்திக்கொண்டிருந்தார். ஏன் அப்படி? நான் அவனை இரகசியமாய் இரசிப்பதாய் அவருக்குத் தோன்றியதோ?
ஒரு கோடிக்கு விலைபோனவன். என் ஆட்சிக்குச் சாதகமாய் செயல்படுவதாய் சொல்லி குரானின் மேல் சத்தியம் செய்தான். என் நாட்டை உரிமைகோரியவர்களிடமிருந்து
ஆனால் குரானிற்குப் பதிலாய் அவன் செங்கல்லைப் பச்சை நிற மஸ்லீன் துணியினால் மறைத்திருந்ததை நான் மட்டுமே கவனித்திருந்தேன். செங்கல்லை இறுக்கிப் பற்றி அழுத்தியவாறு அவன் சத்தியம் செய்தான். ஆனால் அதன்மேல் அவன் கைகள் பாம்பின் கால்களாய் நெளிந்துகொண்டிருந்ததை நான் மட்டுமே கவனித்திருந்தேன். இருந்தபோதிலும் அவன் மறுமுறை வந்தபோது என் கோட்டையின் வாசல் கதவுகளை எந்த எதிர்ப்பும் மறுப்புமின்றித் திறக்கச் சொன்னேன். "ஏன் அப்படிச் சொன்னேன்?", என்று இன்று வரை தெரிந்துகொள்ள எனக்கு ஏனோ தோன்றவில்லை.
இன்று விஷம் அருந்திக் கிடக்கிறேன் . இனிவரும் காலங்களில் வரலாறு, சிக்சாகிப் என்னை ஏமாற்றி வீட்டுச்சிறையில் வைத்ததால் அவமானம் தாங்காமல் விஷம் அருந்தியதாக எழுதும். "தாங்கள் நினைப்பதை நம்பிக்கைகளாகவும், நம்பிக்கைகளையே கதைகளாகவும் புனைந்து பரப்புவார்கள். மெல்ல மெல்லக் கதைகள் புராண வடிவம் பெறும். பின் புராணம் வரலாறாகத் திரிபு பெறும். திரிக்கப்பட்ட வரலாறு கிடைக்கும் சான்றுகளைக் கொண்டு மெருகேற்றப்பட்டு உறுதிப்படுத்தப்படும் . உறுதிப்படுத்தப்பட்ட வரலாறு நேரிடையாகவோ மறைமுகமாகவோ வருங்காலத் தலைமுறைக்குள் திணிக்கப்படும்.
ஆனால் நான் ஏன்
குறிப்பு:
முதலாவது புகைப்படம்: 1858 -ல் அப்போது திருச்சினாப்போளி (Trichynopoly) என அழைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படம். இப்புகைப்படம் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட "சொக்கநாத நாயக்கர் அரண்மனையின்" தோற்றம். பின்னாட்களில் இவ்வரண்மனை "ராணி மங்கம்மாள் மகால்" என்றும் அழைக்கப்பட்டது.
இரண்டாவது புகைப்படம்: சிராப்பள்ளிக் கோட்டையின் முகப்பு வாயில். இன்றும் 'மெயின்கார்டு கேட்' (Main Guard Gate) என்று அழைக்கப்படுகிறது.


அருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete👍👌
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteVery nice sir
ReplyDeleteFantastic sir...
ReplyDeleteMy mom has become your fan Sir.She wants to read more of your writings..
ReplyDeleteSuper
ReplyDelete